சைபர் போலீஸாக ஆசையா?
நி
ஜவுலகின் வழிப்பறித் திருடர்கள், கொள்ளைக் கும்பல்கள் போல இணைய உலகிலும் உண்டு. ஹேக்கர்கள் எனப்படும் இவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தும் நமது கணினி அல்லது மொபைலை ஊடுருவி அதன் நிதி பரிமாற்றங்களையோ தனிப்பட்ட தகவல்களையோ களவாடிச் செல்கிறார்கள். இதுவே பெரும் நிதி, தகவல்களைக் கையாளும், பரிமாறும் நிறுவனங்கள் எனில் ஹேக்கர்களின் தாக்குதல்கள் பெரும் இழப்பை ஏற்படுத்தும். அதைத் தடுக்க நிறுவனங்கள் எதிக்கல் ஹேக்கர்ஸ் உதவியை நாடுகின்றன. இந்த ஹேக்கர்கள் தீவிரவாதப் பின்னணியுடன் இயங்கும்போது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இணையத் தொடர்புகள் இலக்காகின்றன. அத்தகையத் தாக்குதல்களைத் தடுப்பதிலும் எதிக்கல் ஹேக்கர்களின் பணி முக்கியமானது.
வளரும் புதிய துறை
இணையம் இன்றி இணைப்பு சாத்தியமில்லை என்ற அளவுக்கு இன்று ஆன்லைன் வழி சேவைகள் நீக்கமற நிறைந்துவருகின்றன. இதைக் கணித்தே பெரும்பாலானோர் கணினித் துறைப் படிப்புகளை நம்பிக்கையுடன் மேற்கொண்டுவருகின்றனர். ஆனால், இந்தியாவில் ஐ.டி. துறை வேலைவாய்ப்புகள் முன்பு போல இல்லை. அதேநேரம் ஐ.டி. படிப்புகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு மாற்று வாய்ப்பாக எதிக்கல் ஹேக்கிங் தொடர்பான பணிவாய்ப்புகள் வரத் தொடங்கிவிட்டன.
சைபர் செக்யூரிட்டி தொடர்பான ஆய்வின்படி ஹேக்கர்களின் தாக்குதலால் 2014-ல் மட்டும் கிட்டத்தட்ட 400 கோடி டாலர் இழப்பை இந்திய நிறுவனங்கள் சந்தித்திருக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளாக அதிகரித்து வரும் ‘ரான்ட்சம் வேர்’ தாக்குதலில் நிதியைக் கையாளும் நிறுவனங்கள் மட்டுமன்றி, கடந்த வருடம் தனிநபர்களும் அதிஅளவு பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதையொட்டி 2015-ல் நாஸ்காம் வெளியிட்ட ஆய்வறிக்கை, இந்தியாவில் மட்டும் 77 ஆயிரம் எதிக்கல் ஹேக்கர்ஸ் தேவை ஆனால், தற்போது 15 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர் என்று தெரிவித்தது.
சைபர் தாக்குதல்கள், குற்றச் செயல்களைச் சட்டப்படி அணுகுவதற்காக 2013-ல் மத்திய அரசு தேசிய சைபர் செக்யூரிட்டி கொள்கையைக் கொண்டுவந்தது. தேசிய சைபர் செக்யூரிட்டி ஒருங்கிணைப்பாளரான குல்ஷன் ராய், அடுத்த 5 ஆண்டுகளில் சைபர் செக்யூரிட்டி துறையில் பயிற்சி பெற்ற 5 லட்சம் பணியாளர்கள் உருவாக்கப்படுவார்கள் என்று அறிவித்தார். ஆனால், தரமான கல்வி நிறுவனங்கள் இல்லாதது, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வின்மை காரணமாக இந்தக் குறிக்கோளை இன்னும் எட்டியபாடில்லை.
என்ன படிக்கலாம்?
கணினித் துறை சார்ந்த இளங்கலை அறிவியல் பட்டம் அல்லது பொறியியல் பட்டம் படித்தவர்கள், கூடுதலாக எதிக்கல் ஹேக்கிங் தொடர்பான சான்றிதழ் படிப்புமுதல் முதுநிலைப் பட்டயப் படிப்புவரை படிக்கலாம். முதுநிலை பட்டப் படிப்புகளாக எம்.எஸ்சி. சைபர் தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு, எம்.டெக். சைபர் செக்யூரிட்டி மற்றும் தகவல் பாதுகாப்பு போன்றவையும் கிடைக்கின்றன. கேட் நுழைவுத் தேர்வு எழுதி இவற்றில் சேரலாம்.
எங்கே படிக்கலாம்?
கணினித் துறை சார்ந்த அடிப்படைக் கல்வியாக எதைப் படிக்கிறோம் என்பதைப் பொறுத்து எதிக்கல் ஹேக்கிங் சார்ந்த கூடுதல் படிப்புகளைத் திட்டமிடலாம். அலகாபாத்தில் இயங்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலஜி (https://www.iiita.ac.in/), கோழிக்கோட்டின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (http://nielit.gov.in/calicut/) போன்ற நிறுவனங்களில் முழுமையான எதிக்கல் ஹேக்கிங் படிப்புகளைப் பெறலாம். இதற்கென்றே புகழ்பெற்ற கொல்கத்தா இந்தியன் ஸ்கூல் ஆஃப் எதிக்கல் ஹேக்கிங், டெல்லி எதிக்கல் ஹேக்கிங் டிரெயினிங் இன்ஸ்டிடியூட் போன்றவற்றில் சைபர் செக்யூட்டியை மையமாகக்கொண்டு பல்வேறு தொழிற்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவின் புகழ்பெற்ற எதிக்கல் ஹேக்கர்களான அன்கிட் ஃபாடியா (http://www.ankitfadia.in/) உள்ளிட்டோர் கட்டணத்துக்கு ஏற்ப சிறப்புப் பயிற்சிகளை வழங்குகிறார்கள். மேற்கண்ட கல்வி நிறுவனங்களில் பலவும் ஏராளமான சான்றிதழ் படிப்புகளை இணையம் வாயிலாகவே வழங்குகின்றன.
கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு
ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறைகள், மத்திய-மாநிலப் புலனாய்வு அமைப்புகள், தடவியல் துறை, அரசு ஏஜென்சிகள் போன்றவை நேரடியாகவும் ஒப்பந்த அடிப்படையிலும் சைபர் செக்யூரிட்டிக்கான பணிவாய்ப்பை வழங்குகின்றன. தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றிலும் எதிக்கல் ஹேக்கர்ஸ் பணிவாய்ப்பு பெறலாம்.
எதிக்கல் ஹேக்கிங் துறை எதிர்காலத்தில் மேலும் வளர்வதற்கும், கூடுதல் படிப்புகள், வேலைவாய்ப்புகளைக் கொண்டதாக மாறவும் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் படிப்புடன் இத்துறைக்குள் வரும் புதியவர்கள் ஆண்டு வருமானமாக ரூ. 3- 5 லட்சங்களில் ஊதியம் பெறுகிறார்கள். கூடுதல் கல்வியுடன் துறை அனுபவமும் பெற்றவர்கள் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி அனலிஸ்ட், எதிக்கல் ஹேக்கிங் எக்ஸ்பர்ட்ஸ் போன்ற பதவிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.20 லட்சம்வரை ஊதியம் பெறுகிறார்கள்.
இந்தியாவின் பிரசித்தி பெற்ற எதிக்கல் ஹேக்கர்ஸில் பெரும்பாலானோர் தங்களது பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்தில் விளையாட்டாக ஹேக்கிங் குறித்து ஆராயத் தொடங்கி, இன்று முழுநேர வேலையாக அத்துறையில் புகழ் பெற்றிருக்கிறார்கள். அடிப்படைக் கல்வியுடன் ஆர்வம், படைப்பாற்றல், உற்று நோக்குதல், தர்க்கரீதியான உடனடி முடிவெடுக்கும் திறன், உத்வேகம் உள்ளிட்ட திறன்கள் இத்துறையினருக்கு அவசியம்.


Comments
Post a Comment