வேலைவாய்ப்புக்கான தேசிய வழிகாட்டி சேவையை பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா..?
உயர்கல்வி படித்து முடித்த பின்னர் ஒவ்வோர் இளைஞனும் வேலை தேடி அலைவது அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது, நாள்தோறும் வேலை வாய்ப்பு குறித்த விளம்பரங்களை தேடுவது, வேலைவாய்ப்பு செய்தித்தாள்களை பார்ப்பது போன்ற வேலையே பட்டதாரிகளின் அன்றாட வேலையாக மாறிவிட்டது. அதுவும் தனது படிப்பிற்கேற்ற வேலை, தகுதிக்கேற்ற வேலை எங்கு உள்ளது? அதை எப்படி அணுகுவது? என்பதைத் தெரிந்து கொள்ளவே இன்றைய இளைஞர்கள் அதிக நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது.
நாட்டில் உள்ள மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து முடித்து பட்டதாரிகளாக வெளியே வருகின்றனர். அவர்களுள் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தனக்குரிய வேலையை பெறமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் ஆண்டுக்கு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு கல்வி நிறுவனங்கள் பயிற்சி அளித்தாலும், அனைவருக்கும் வேலை கிடைக்கிறதா என்றால், இல்லை என்பதுதான் பதிலாக கிடைக்கிறது.
அத்தகைய வேலை தேடும் இளைஞர்களின் சுமையைக் குறைப்பதற்காக தேசிய அளவிலான இணைய சேவையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் தேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டி சேவை என்னும் பிரிவை ஏற்படுத்தி உள்ளது. அதற்காக National Carrier Service (www.ncs.gov.in) என்ற இணையத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் படிப்பை முடித்த இளைஞர்கள் தங்களுக்கான தனி கணக்கைத் தொடங்கி அதில் தங்களது படிப்பு மற்றும் வேலை குறித்த தகவல்களை இதில் பதிவு செய்து விட்டால், வேலை தரும் நிறுவனத்தில் இருந்து உரிய வேலை வாய்ப்புத் தகவல்கள் அவர்களின் கைபேசிக்கு குறுந்தகவலாக (எஸ்எம்எஸ்) அனுப்பப்பட்டு விடும்.
இதுபோன்று வேலை தரும் தனியார் நிறுவனங்களும் இணையதளத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு ஏற்ற தகுதி, வாய்ந்த நபரைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
இதில் பட்டதாரிகள் மட்டுமின்றி பிளஸ் டூ, பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களும் தங்களுடைய கல்வித் தகுதியை இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம். தாங்கள் எந்த மாதிரியான வேலையை, எந்த துறைகளில் தேடுகிறோம் என்பதை தெரிவித்தால் தொடர்புடைய அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை விண்ணப்பதாரரின் கைபேசி எண்ணுக்கு குறுந்தகவலாக (எஸ்எம்எஸ்) அனுப்பப்பட்டு விடும்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பணி தற்போது மாறி, தேசிய வேலை வழிகாட் பணி என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் செயல்பட உள்ளது. தமிழகத்தில் வேலூர், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மாதிரி மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும் வெளிநாடு செல்வோரும் இந்த இணையத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அயல்நாட்டு பணிக்கு குறைந்த செலவில் பதிவு செய்து, நம்பகத் தன்மையுடன் கூடிய வேலை வாய்ப்பையும் பெறலாம். இது தவிர உள்ளூர் சேவை, திறன் சார்ந்த பயிற்சிகள் குறித்த விவரங்கள், பணித்திறன் பயிற்சிகள் குறித்த நிபுணர்களின் ஆலோசனைகள் உள்ளிட்டவற்றையும் அறிந்து கொள்ள முடியும். இந்த இணையத்தில் பதிவு செய்ய ஆதார அட்டை, படிப்புச் சான்றிதழ் ஆகியவைக் கொண்டு கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்.
இந்த சேவை தொடர்பான கூடுதல் விவரங்களை பெற 18004251514 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம். ஆங்கிலம், ஹிந்தி மொழிகளுடன் பிராந்திய மொழிகளிலும் உரிய விவரங்களை அளிக்கிறார்கள்.
கிளிக் செய்க... https://www.ncs.gov.in/Pages/default.aspx
Comments
Post a Comment